தலைப்பைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு பெண்ணைப் பற்றி அல்லது தாயைப் பற்றிச் சொல்லப் போகிறேன் என நினைக்கிறீர்களா?
நீங்க நெனச்சது சரிதான். இருந்தாலும் இது வேற. பிள்ளைப் பாசம் கொண்ட ஒரு பசுபற்றிய கதை.
ஒரு ஏழை வீட்டிற்கு அது வந்த நேரம் அவங்களுக்கு அடிப்படை வசதிகள் பெருகியதால், அது ராசியான மகராசி. ஆனால், மகராசிக்கு ஏற்பட்ட சோதனைகள் மற்றும் அது சந்தித்த போராட்டங்கள் பல. அதனைப் பற்றியதுதான் இந்தக் கதை.
தாய்ப் பாசத்திற்கு மிருகங்களும் விதி விலக்கல்ல என்பதற்கு முத்தான உதாரணம் மகராசி.
மகராசி ஒரு கன்றை ஈன்றதாம். சில வாரங்களுக்குப் பின் தினமும் தாய்மடியின் பாலை ஒட்டக் கறந்துவிடுவார்களாம். இதனை உணர்ந்த மகராசி சொரப்பு விடாமல் அடக்கிக்கொள்ளுமாம். மாட்டின் உரிமையாளர்கள் என்ன முயன்றும் மகராசிதான் ஜெயிக்குமாம்.
மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விடும்போது கன்றுக்குட்டியைத் தேடிச் சென்று ஊட்டிவிடுமாம்.
கன்றுக்குட்டி தாயை எப்போது சந்திக்கும் என்று பார்த்துக்கொண்டே இருப்பார்களாம் உரிமையாளர்கள். மகராசி கன்றைப் பார்த்தவுடன் சுற்றும் முற்றும் பார்க்குமாம். யாராவது பார்த்துவிட்டால் கன்றை உதைத்துத்தள்ளுமாம். அருகில் சேர்க்காதாம். யாரும் தன்னை கவனிக்கவில்லை என்பதை தெளிவு பண்ணிக்கொண்ட பிறகுதான் கன்றுக்குட்டியை பால்குடிக்க அனுமதிக்குமாம்.
இதைக் கவனித்தவர்கள் அடுத்தநாள் முதற்கொண்டு இரண்டுபேர் தயாராக இருப்பார்களாம். ஒருவர் கையில் தாம்பு கயிற்றுடனும் இன்னொருவர் கையில் தண்ணீர் சொம்புடனும் மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் ஏதாவது ஒரு வீட்டின் தாழ்வாரத்தில் அல்லது தட்டி மறைவில் பதுங்கிக்கொள்வார்களாம்.
பசு சுரப்பு விட்டவுடன் மறைவில் இருந்தவர்கள் ஓடிப்போய், ஒருவர் மகராசியின் காலைக்கட்ட, அடுத்தவர் மடியை சுத்தம் செய்து அவசர அவசரமாய் பாலைக் கறப்பார்களாம். தினமும் இதே போன்று அவர்கள் பாலை ஒட்டக் கறந்துவிடுவார்களாம்.
இப்படியாகத் தினம் தினம் தன் கன்றுக்குப் பால் தரப் போராடிய மகராசி, என்ன நினைத்ததோ, பல நாட்கள் பார்த்துப் பார்த்து மனப்புழுக்கத்தில் வதைந்ததோ என்னவோ நோய்வாய்ப் பட்டு இறந்தேவிட்டதாம்.
இறுதியில், “அச்சோ! மகராசி இறந்துவிட்டாளே!” என்றுதான் வேதனைப் பட்டார்களாம் உரிமையாளர்கள். ராசியான மாடு இறந்துபோச்சே என்றுதான் கவலைப்பட்டார்களே தவிர, அதன் தாய்ப் பாசத்தை உணரவில்லையாம். பிறகு கன்றும் சில வாரங்களில் புல் மேயாமல் இருந்து இறந்துவிட்டதாம்.
மகராசி நல்ல ராசியான பசுமாடு என்றுதான் இன்றைவரைக்கும் உரிமையாளர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், தாய்க்கும் கன்றுக்கும் இருந்த பாசப்பிணைப்பை உணர முடியவில்லை.
காலம் மாறிவிட்டது; மிருகங்களும் பாசத்திற்காக ஏங்குகின்றன என்பதை மனிதர்கள் ஏன் இன்னும் உணர மறுக்கிறார்கள்?
உணர்ந்தால் இப்படி மிருகவதை செய்வார்களா?
பதில் சொல்லுங்களேன்!
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
நாட்டில் மனித மிருகங்கள் அதிகமாகி விட்டது…
உண்மைதான்.