சொற்பொழிவு

இலக்கியத்தில் பண்பு – ஒரு சொற்பொழிவு

சொற்பொழிவு

தகவல்களைப் பரிமாறிக்கொள்ள உயிர்மூச்சாக இருக்கும் ‘இணையதளம்’ அவர்களே, இந்த வலைப்பூ இயங்க இருக்க இடம் கொடுத்த ‘blogger.com’ அவர்களே, இந்த இடத்திற்கு ஒரு விலாசத்தைக் கொடுத்த Bigrockஅவர்களே, அன்பான வலைப்பூவின் உறுப்பினர்களே, பல திரட்டிகளிலிருந்து ஆவலுடன் இங்கு வந்திருக்கும் தமிழ் பிரியர்களே, மேலும் இந்த இடுகையை ‘share’ செய்யத் துடிக்கும் சமூக வலைத்தளங்களின் நண்பர்களே, உங்கள் அனைவருக்கும் என் முதற்கண் வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்று நான் பேச எடுத்துக்கொண்ட தலைப்பு ‘இலக்கியத்தில் பண்பு’.

இலக்கியம் – இலக்கு + இயம். உயர்ந்த குறிக்கோளைக் கொண்டு இயங்குவது இலக்கியம். வாழ்வில் மனிதர்கள் கண்ட ஆழ்ந்த அனுபவத்தையும் பேருண்மைகளையும் வெளியிடுவது இலக்கியம். ஒவ்வொரு வாய்ப்பும், சூழ்நிலையும், நிகழ்ச்சியும் முன்னர் வாழ்ந்த மக்களை எவ்வாறு தாக்கின, அத்தாக்குதலின்போது அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டனர் என்பதையும் அறிவிக்கும் அனுபவ கருவூலம் இலக்கியம். ‘வாழ்ந்து காட்டும் வாழ்க்கையை சொற்களால் கூறுவதே இலக்கியம்.’ இது Pro.அ.ச.ஞானசம்பந்தம் இலக்கியத்திற்கு தரும் விளக்கமாகும்.

இலக்கியம் என்பது கலம்தோறும் மாறிவரும் மக்கள் உணர்ச்சிகளையும் பயன் மதிப்புகளையும் படம் பிடித்துக் காட்டுவதாகும். வேறுபட்ட சமூகங்களில் உண்டாகும் மாற்றங்களின் இயல்புகளைச் சுட்டுவது இலக்கியம். தனிமனிதன் எவ்வாறு சமுதாய மாற்றத்திற்கு ஏற்பவும், புதிய அனுபவங்கட்குத் தக்கவாறு தன் உணர்வுகளைப் பண்படுத்திக் கொள்கிறான் என்பதைப் புலப்படுத்துவது இலக்கியம். சமூக சக்திகளின் தாக்கத்தால் மனிதன் எவ்வாறு செயல்படுகிறான் என்பதை கணித்துக்கூறும் பாராமீட்டர் இலக்கியம். இது ‘The sociology of literature’ என்னும் புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள இலக்கியத்திற்கான வரையறை.

The Primary Classical Language of the World என்னும் பெருமைக்குரிய உலகின் முதற் செம்மொழியாகிய தமிழ்மொழியும் மிக்குயர் இலக்கியங்களைப் படைத்துள்ளது. இத்தகைய உயர்ந்த கருத்துக்களை தரும் ‘இலக்கியத்தில் பண்பு’ என்பதுபற்றி இவண் காண்போம்.

பண்பு – Essentially dynamic. பண்பு என்பது பண்படுதல் என்பதனின்று பிறப்பதாகும். பண்பு என்பது உயர்ந்த பழக்க வழக்க ஒழுக்க நெறிகளின் மொத்த உருவமேயாகும். ‘பண் பெனப்படுவது பாடறிந்தொழுகல்’ என்பது கலித்தொகை காட்டும் வாழ்வியற் சட்டமாகும். பண்பைப் பண்பாடென்றும் இலக்கியங்கள் கூறும்.

பெருமை சான்றாண்மைகளில் தாம் வழுவாது நின்றே எல்லார் இயல்புகளும் அறிந்து ஒத்து ஒழுகுதல் என்று பரிமேலழகரும், “யாவர் மாட்டும் அவரோடு ஒத்த அன்பினராய்க் கலந்து ஒழுகுதலும், அவரவர் வருத்தத்திற்கு பரிதலும், பகுத்து உண்டலும், பழி நாணலும் முதலான நற்குணங்களும் யாவும் உடைமை” எனப் பரிபாடரும், சான்றாண்மையை மேற்கொண்டு நின்றே அவரவர் பண்பறிந்து அதற்கேற்றவாறு ஒழுகுதல் என்று பாவாணரும், உலகியல்பரிந்து அதற்கிசைய நடத்தல் என்று கா.சு. பிள்ளையவர்களும் பண்புகுறித்து விளக்கம் அளிக்கின்றனர்.

இலக்கியங்கள் யாவுமே உயர்ந்த நெறிகளில் சிலவற்றையோ, பலவற்றையோ வலியுறுத்துவனவே. அவ்வுயர் நெறிகளின் வழியே, பண்புகளின் வழியே, மக்களை வழிநடத்தி அவர்கள் பெறவேண்டிய இம்மை பயன்களையும் மறுமைப் பயன்களையும் அடைவிப்பதே இலக்கியங்களின் இலக்காகும். தமிழ் மொழியில் பண்ணெடுங்காலமாக வழங்கிவரும் அற இலக்கியங்களும், பக்தி இலக்கியங்களும், நீதி இலக்கியங்களும், இதிகாசங்களும், புராணங்களும் மற்றும் அண்மை கால இலக்கியங்களும் இத்தகு நோக்குடையனவே.

இவ்வுலகில் தோன்றி தன் நோக்கத்தையுணர்ந்து புகழோடு வாழ்ந்தும் நிலையில்லா இவ்வுலகில் தம் பெயரும் புகழும் நிலைபெறுதலைக் குறிக்கோளாகக் கொண்டும், தாம் மாய்ந்தாலும், தம் புகழினை நிலை நிறுத்தியும், தமக்கென முயலாமல் பிறர்க்கெனவே முயன்றும் இப்புவியை வாழவைத்தும் சென்ற சான்றோர்களும், ஆன்றோர்களும் மேற்கொண்டொழுகிய பண்புகளே வழி வழியாக உலகை செந்நெறிப்படுத்தி வாழவைக்கின்றன.

‘உலகம் என்பது உயர்ந்தோர்மேற்றே என்கிறது தொல்காப்பியம். உலகம், மக்கள் என்பதெல்லாம் நன்னெறியோடு வாழும் நன்மக்களைக் குறிப்பதே. இவ்வாறு செந்நெறி செல்லும் நன்மக்களின் பண்புகள் அன்புடைமை, அருளுடைமை, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஆர்வமுடைமை முதலாகத் தொடங்கி திருவள்ளுவர் தமது நூலில் ஏறத்தாழ நூற்றுப் பதினைந்து பண்புகளைக் குறித்து சொல்லுகின்றார். அவர் குறித்துள்ள இந்நூற்றுப் பதினைந்து பண்புகளைத் தவிர வேறு எந்தப் பண்புகளும் இருப்பதற்கில்லை. எனவே, திருக்குறள் நீதி இலக்கியம் மட்டுமல்ல, வாழ்வில் அனுபவத்திற்கண்ட பண்புகளின் தொகுப்பாய் பண்பிலக்கியம் என்றும், வாழ்விலக்கியம் என்றும் கூறலாம்.

காதல், வீரம், கொடை, அருள், அறம், ஒழுக்கம், கடமை முதலிய அகநிலை கூறுகளாகிய உணர்வுகளின் உயரிய நிலையே பண்பு ஆகும். பண்பென்பது உலகந்தழுவிய ஓர் உயரிய சொல்லாகும். உலகின் எந்த நாட்டினரிடத்தும், எவ்வினத்தாரிடத்தும் எளிதாகப் பழகும் தன்மையதாகும். இதற்கு அன்பே அடிப்படையாகும். அன்பு இல்லையேல் பண்பு இல்லை. பண்புடையவர்களால்தான் இவ்வுலகம் நிலைபெற்றுள்ளது. இல்லையேல் மண்ணோடு மண்ணாகிவிடும்.

பண்பை வள்ளுவர் நோக்கில் செல்வத்திற்குரிய பண்பு (Material Culture), ஆன்மாவிற்குரிய பண்பு (Spiritual Culture) என இருவகைகளாகப் பிரிக்கலாம். பண்பை வலியுறுத்தும் வள்ளுவர் இறப்போர்க்குரிய பண்பு இத்தகையது என்றும், இறைவனுக்குரியது இத்தகையது என்றும், இறப்போன் முதலாக இறைவன் ஈறாகப் பண்பை வரையறுத்துக் கூறும் பண்பே தனிச் சிறப்பாகும். செய்நன்றியறிதலை ஒரு சிறந்த பண்பாக இராமாயாணத்தில் கும்பகர்ணன் வாயிலாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது.

நல்லந்துவனார் என்னும் நல்லிசைப்புலவர் நெய்தர்கலி 16-ம் பாடலில் ஆற்றுதல், போற்றுதல், பண்பு, அன்பு, அறிவு, செறிவு, நிறை, முறை, பொறை என சில அரிய பண்புகளைக் கூறுகிறார்.

“இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண

நன்னயம் செய்து விடல்” இது வள்ளுவன் கூற்று.

“ஒரு கன்னத்தில் அறைபவனுக்கு அவன் நாண

மறு கன்னத்தையும் காட்டு” – இது இயேசுவின் வாக்கு.

தன்னைப் போல் பிறரையும் நேசிக்கும் பண்பு, பண்பில்லாதவர்களிடையே எப்படி வரும்? இன்னா செய்பவனை மன்னிக்கும் மனம் எப்படி வரும்? நம்மில் வளர்ந்துள்ள பண்பு பண்பட வேண்டும். பண்பு அல்லாதன களையப்படல் வேண்டும்.

We are in the computer world and computer has become part and parcel of men’s life. It’s all for the progress of mankind. But, we with our computer mind harm others, bully others. We promote ourselves at the cost of others. What kind of culture is this?

We must modify our spiritual and material culture. Nehru defines culture as some inner growth in man. Let us adorn ourselves with solid cultures and not forgetting youngsters, our children to soak in good cultures.

ஆக, நமது தமிழ் இலக்கிய நூல்கள் அனைத்தும் மனித சமூகம் பெற வேண்டிய சிறந்த பண்புகளை வலியுறுத்துகின்றனவாக இருக்கின்றன. இவைகளைப் போற்றுவோம், பின் பற்றுவோம்.

நன்றி, வணக்கம்.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

2 Comments

  1. river livejobs பிப்ரவரி 1, 2013
  2. parhti zplus ஜூலை 23, 2013

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading