பேய்கள் ஜாக்கிரதை

பேய் இருக்கா? இல்லையா? – சிறுகதை

பேய்கள் ஜாக்கிரதை

பேய் இருக்கா? இல்லையா?

இந்தக் கேள்விதான் வாசு மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருப்பது. அதற்குக் காரணம் அவன் பேய்பற்றி ஒரு ஆராய்ச்சி கட்டுரை எழுதிக்கொண்டிருக்கிறான். அவன் மனம் ஒருபக்கம் பேய் இருக்கிறது என்று கூறுகிறது. மற்றொரு பக்கம் அதெல்லாம் வெறும் மூட நம்பிக்கையென்று கூறுகிறது.

அடிக்கடி அவன் பேய் கதைகள் கேள்விப்படுகிறான். தன் சொந்த ஊரிலும் மற்றும் சுற்றியுள்ள ஊர்களிலும் சில பேய் கதைகள் கூறப்பட்டு வருவதால் மிகக் குழப்பத்தில் இருக்கிறான். அவன் கேள்விப்பட கதைகள் அனைத்தையும் தொகுத்து எழுதி வைத்திருக்கிறான். ஆனால் அவனுக்கு முடிவுதான் கிடைக்கவில்லை. அதாவது ‘பேய் இருக்கா? இல்லையா?’ என்பதுதான் அது.

அதனால் இந்தக் கேள்வியை அனைவரிடமும் அடிக்கடி கேட்பதையே வழக்கமாகக் கொண்டிருந்தான். அனைவரும் அவரவர்கள் பாணியில் விடை கூறினர். அவன் தமிழ் ஆசிரியரான தன் அப்பாவிடம் கேட்டபோது,

“டேய்! பேய் இருப்பது உண்மைதாண்டா. பேய்கள் நம்ம கூடவேதான் வாழுதுங்க!” என்று மறுமொழி கூறினார்.

“எப்படிப்பா அவ்வளவு அழுத்தமா சொல்றீங்க?”

“இப்ப உன் அம்மா நம்ம கூடாதானே வாழுது?”

“என்னப்பா, அம்மாவா பேய்யின்னு சொல்றீங்க?”

“பின்ன? பெண்கள் அனைவரும் பேய்தானே!”

“என்னப்பா, மொத்த பெண்களும் பேய்தான் ன்னு சொல்றீங்களே?”

“ஆமாண்டா. அந்தக் காலத்திலேயே காளமேகப் புலவரே சொல்லியிருக்காருடா.”

“என்ன சொல்லியிருக்காரு?”

‘பெண்ணைப் படைத்தாய் பிறகு ஏன் பேயைப் படைத்தாய்’ என்று கடவுளையே திட்டுகிறார். எவ்வளவு நொந்து போயிருந்தா இப்படி பாடியிருப்பாரு! கடவுளே என்ன இந்தப் பேயிடமிருந்து காப்பாற்று.”

“என்ன? என்ன சொன்னீங்க? நான் பேயா?” என்று தோசைக் கரண்டியுடன் சமயலறையிலுருந்து வெளிவந்த வாசுவின் அம்மா மிகுந்த கோபத்துடன் தென்பட்டார்.

“இல்ல இல்ல. நான் ஒன்னப்பற்றிச் சொல்லல. இவன் ஏதோ பேயப் பற்றிக் கட்டுரை எழுதுறானாம். அத பற்றிதான் விவாதிச்சிட்டு இருந்தோம்.”

“இம்… அது. நான் இங்க கால் கடுக்க நின்னு சமயல் செய்யிறேன். நீங்க என்ன பேய் ன்னு சொல்றீங்களா?”

வாசுவின் அப்பா அமைதியாக இருந்தார். பிரச்சினை ஒரு வழியாக முடிந்தது.

குடும்பத்தில் பெண்கள் சிறிது தலை தூக்கிவிட்டாலே ஆணாதிக்க சமுதாயம் அதனை ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. பெண்களுக்கென்று ஒரு இலக்கணத்தை வைத்து அவர்களை அடக்க முயற்சிக்கிறது. ஒருவேளை காளமேகப் புலவரும் இதே ஆணாதிக்க சமுதாயத்தில்தான் இருந்திருப்பரோ என்று வாசு தன் மனதில் எண்ணிக்கொண்டான்.

‘பேய் இருக்கா? இல்லையா?’ இந்தக் கேள்வியை வாசு தனது அம்மாவிடம் கேட்டான். அதற்கு அவன் அம்மா மினி பேய் கதை, ஒரு பெண் ஆவி தனது கணவனைப் பழிவாங்கிய கதை மற்றும் பேய்மீது நம்பிக்கை இல்லாதவன் ஒருவனுக்கு நடந்த கதை போன்ற கதைகளைக் கூறி பயமுறுத்திவிட்டார்.

‘பேய் இருக்கா இல்லையா?’ இதே கேள்வியை வாசு தன் தாத்தாவிடம் கேட்டபோது அவரும் தன் வாழ்கையில் நடந்த பல பேய் கதைகளைக் கூறினார். அவற்றுள் முக்கியமான ஒன்று.

அந்தக் காலத்தில் பேருந்து வசதிகள் இல்லாததால் வெளியூருக்கு செல்ல விரும்பினால் நடந்துதான் செல்வார்களாம். உறவினர் வீட்டிற்கு செல்லும்போது கறி சமைத்து எடுத்துச் செல்வது வழக்கமாம். கறியை ஒரு தூக்குச் சட்டியில் போட்டு அதன் மேல் வாழை இலை வைத்து மூடி அந்த இலைக்கு மேல் அடுப்புக் கரி துண்டுகளை எச்சில் துப்பி வைத்துப் பின் மூடியால் மூடுவார்களாம். ஏனெனில் தனிமையில் செல்லும்போது பேய், கறிக்கு ஆசைப்பட்டு எடுத்துச் செல்பவர்களைப் பிடித்துக் கொள்ளுமாம். ஆனால், அந்த அடுப்புக் கரி துண்டு இருப்பதால் அதனைத் தன் படையலாக எடுத்துக்கொண்டு கறியையும் அதனை எடுத்துக் செல்பவர்களையும் விட்டுவிடுமாம். உறவினர் வீட்டை அடைந்தவுடன் அந்த அடுப்புக் கரியை தூக்கிப் போட்டுவிட்டு இறைச்சியை மட்டும் கொடுப்பார்கள். ஆனால் அடுப்புக் கரி வைக்க மறந்தால் பேய் அவர்களைத் தொடர்ந்து வந்து பிடுத்துக் கொள்ளுமாம். கறியையும் தின்றுவிடுமாம். அதாவது கறியின் ருசி கெட்டு அதை நாம் திங்கும்போது சப்பென்று இருக்குமாம்.

அவன் தாத்தா வெளியூரில் உள்ள தன் இரண்டாவது மகள் வீட்டிற்கு இவ்வாறாகக் கறி சமைத்து எடுத்துச் செல்லும்போது யாரோ செருப்பு போட்டுத் தன் பின் நடந்து வருவது போன்ற சத்தம் கேட்குமாம். ஆனால், திரும்பிப் பார்த்தால் யாரும் இருக்க மாட்டார்களாம். ஒரு நாள் அவர் தூக்குச் சட்டியில் அடுப்புக் கரி வைக்க மறந்துவிட்டார். அவர் தன் மகள் வீட்டை அடையும்போது மணி பகல் மூன்று. பின் சிறிது நேரம் தூங்கலாம் என்று தூங்கும்போது யாரோ வந்து தன் மீது படுப்பது போன்று உணர்ந்த அவர் தூக்கத்திலேயே அலறினாராம். வீட்டில் உள்ளவர்கள் அவரைப் பேய் அமுக்குகிறது என்று உணர்ந்து அவர் நெற்றியில் திருநீர் வைத்துவிட்டார்களாம். அதன் பிறகே அவர் சரியானாராம். பின் அவர் எடுத்துவந்த கறியை சாப்பிட்டார்கள். ஆனால் அதில் சுவையே இல்லையாம். ஏனென்றால் அதைனை பேய் தின்றுவிட்டதாம்.

இந்தக் கதை பரவாயில்லை. ‘பேய் இருக்கா இல்லையா?’ என்று வாசு தன் பாட்டியிடம் கேட்டபோது அவர் சொன்ன கதைகள் கொஞ்சம் வேடிக்கையாக இருந்தன. அவற்றுள் ஒன்று.

இது முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்தது. அவர் தன் கொல்லையில் வேலை பார்த்து முடிக்க ஒரு சில நாள் இரவு ஒன்பது மணி ஆகிவிடும். வாசுவின் தாத்தா நெற்குவியலை காவல் காக்க அங்கேயே தங்கிவிடுவாராம். ஆனால் பாட்டி தன் பிள்ளைகளுக்குச் சாப்பாடு கொடுக்க வேண்டும் என்பதற்காக வீட்டிற்கு வந்துவிடுவாராம். வரும் வழியில் பேய்கள் பல ஐசாட்டியங்களை செய்யுமாம். இவர் பேய்க்குப் பயப்படாதவர் என்பதால் இவரைப் பேயால் கொல்ல முடியாது. ஆனால் தலையில் மண் வாரிப்போடுமாம். கல் எடுத்து வீசி அடிக்குமாம். புளிய மரத்தில் அமர்ந்துகொண்டு மரத்தை உலுக்கிவிடுமாம். சில நேரங்களில் கிளைகளை ஒடித்து அவர்மீது சாய்க்குமாம்.

ஒருநாள் வரும் வழியில் அவருடைய தோழி ஒருவர் தன் கொல்லைக்கு அவரைக் கூப்பிட்டிருக்கிறார். அவர் காட்டுக் கிழங்குகள் பிடுங்கி வைத்திருப்பதாகவும் அதனை அவர் பிள்ளைகளுக்கு எடுத்துச் செல்லுமாறும் கூறி அவரை அழைத்துச் சென்றாராம். தோழி முன் செல்ல வாசுவின் பாட்டி அவருக்குப் பின் சென்றுகொண்டிருந்தாராம். சிறிது தூரம் சென்ற பிறகுதான் தன் தோழி கால்கள் இல்லாமல் அந்தரத்தில் நடந்துசெல்வது தெரிந்ததாம். பேய்தான் தன் தோழி வேடத்தில் வந்து தன்னைக் கொல்ல அழைத்துச் செல்கிறது என்பதை உணர்ந்த அவர், பேயைக் கூப்பிட்டாராம். அது திரும்பிப் பார்க்க வாசுவின் பாட்டி தனது செருப்பைக் கழற்றி அதனை அடிக்க முயன்றிருக்கிறார் (பொதுவாகப் பேய்கள் செருப்பைக் கண்டால் பயப்படுமாம்). ஆனால் பேய் பயந்து மறைந்துவிட்டதாம். இதைப் போன்று பல கதைகளை வாசுவின் பாட்டி அவனுக்குக் கூறினார்.

‘பேய் இருக்கா இல்லையா?’ இந்தக் கேள்வியை வாசு ஊரில் அனைவரிடமும் கேட்டுவிட்டான். தன் ஆசிரியர்களுள் ஒருவரிடமும் இதையே கேட்டான். அவர் அறிவியற்படி விளக்கம் கூறினார்.

நியூட்டனின் மூன்றாம் விதிப்படி ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. நல்லது என்று ஒன்று இருந்தால் தீமை என்று மற்றொன்று இருக்கிறது. அதுபோல, கடவுள் என்று ஒருவர் இருந்தால் அதற்கு எதிர்மறையான ஒன்று இருந்துதானே ஆக வேண்டும்? என்று வாசுவிடமே அவர் கேள்வி கேட்டு முடிவை அவனிடம் விட்டுவிட்டார்.

வாசு எழுதும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு முடிவு வேண்டும். எனவே ‘பேய் இருக்கா இல்லையா?’ என்ற கேள்வியை அவன் தன் மனதிடமே கேட்டுக் கொண்டான். “ஊரில் உள்ளவர்கள் அனைவரும் இருக்கிறது என்று நம்புகின்றனர். ஆனால் நான் நம்ப அதைப் பார்க்கவோ அல்லது உணரவோ வேண்டும்.” என்றது அவன் மனம்.

ஒருநாள் வாசு வெளியூருக்குச் சென்றுவிட்டு வருவதற்குள் இரவாகிவிட்டது. அவன் தனது மோட்டார் வண்டியில் வரும் வழியில் சுடுகாடு வழியே வந்தான். அவனது அம்மா அவன் வீட்டிற்கு வந்ததும் அவனை வெளியில் வைத்துள்ள வாளியில் தண்ணீர் மொண்டு கால் கழுவிவிட்டு வரச்சொன்னார். இரவில் வெளியில் சென்று வரும்போது நம்மைப் பின்பற்றிப் பேய் வரும். நாம் கால் கழுவிவிட்டு வந்தால்தான் அது போகும். இல்லையென்றால் அது நாம் தூங்கும்போது நம்மை வந்து அமுக்கும் என்று அம்மா அடிக்கடி சொல்வது வாசுவின் ஞாபகத்திற்கு வந்தது.

“இன்று நாம் கால் கழுவாமல் சென்றால் என்ன? உண்மையில் பேய் என்று ஒன்று இருக்கிறதா என்று பார்த்துவிடுவோம்.” என்று எண்ணிய வாசு கால் கழுவாமல் சென்று தூங்கினான். அவனுக்கு ஒரு கனவு வந்தது. அதிலும் அவன் தூங்கிக் கொண்டிருக்கிறான். அப்போது அவன் அருகில் ஒரு கரிய உருவம் அமர்ந்திருக்கிறது. அது வாசுவிடம் கேட்டது.

“டேய், நீ என்ன கொம்பனா? எங்ககிட்டயே வால் ஆட்டுற? நான் யாரு தெரியுமா? நான்தான் எங்க கூட்டத்துக்கே தலைவன். நாங்க எத்தன பேர் குடிய கெடுத்திருக்கோம் தெரியுமா?” இப்படி பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தது.

வாசு தன் அருகில் ஏதோ ஒரு கொடிய உருவம் இருப்பது போன்று உணர்ந்து பயத்தில் தூங்குவது போன்று நடித்துக்கொண்டிருந்தான்.

“டேய், என்னடா நான் பாட்டுக்கும் கேள்வி கேட்டுக்கிட்டே இருக்கேன். நீ அத பொருட்படுத்தமா தூங்கிறியா? உனக்கு அவ்வளவு திமிரா? இருடா உன் கதைய முடிச்சிடுறேன்…” என்று கூறிய அந்த உருவம் அவன் கழுத்தை நெறித்தது.

வாசுவிற்கு மூச்சு வரவில்லை. “காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…” என்று கூக்குரலிடுகிறான். இது கனவில் நடந்துகொண்டிருந்தாலும் நிஜத்தில் நடப்பது போன்று அவனுக்கு உடலில் வலி ஏற்பட்டது. மூச்சு கூட விடமுடியவில்லை. அலறியடித்துக்கொண்டு விழித்தெழுந்தான். தன் மகனின் அலறல் கேட்டு அவன் அம்மாவும் அப்பாவும் எழுந்தார்கள். அவன் மூச்சு விடமுடியாமல் சிரமப்படுவதைப் பார்த்து அம்மா தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார். அதைக் குடித்த அவன் நடந்தவற்றை கூறினான். எனவே அப்பா அவன் நெற்றியில் திருநீர் வைத்துவிட்டார். பின் இனிமேல் இரவில் வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போது கால் கழுவிவிட்டு வருமாறு அவனைக் கண்டித்தார்.

வாசு மறுபடியும் தூங்க முற்பட்டான். அவன் அம்மா காலையில் பூசாரியை அழைத்துவந்து மந்திரிக்க வேண்டும் என்று கூறிக்கொண்டிருந்தார். ஆனால் வாசுவிற்கு அவன் எழுதிக்கொண்டிருக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைக்கு ஒரு முடிவு கிடைத்துவிட்டது என்று தோன்றியது.


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading