சிறிய குழந்தைகளை ஆசையாகக் கொஞ்ச, பல செல்லப் பெயர்கள் வைத்துக் கூப்பிடுவோம். ஒரே ஒரு செல்லப் பெயர் வைத்துக் கூப்பிட்டால் நமக்குத் திருப்தி இருக்காது. அம்முக்குட்டி, செல்லக்குட்டி, கண்ணுக்குட்டி, மணிக்குட்டி, கண்ணே, மணியே, முத்தே, ராஜா, ராஜாத்தி என்று பல பெயர்கள் வைத்துக் கொஞ்சினாலும், மேலும் புதிது புதிதாகப் பெயர் வைத்துக் கொஞ்சவே விழைவோம்.
அதுபோல, தமிழை அழைக்க மற்றும் அதன் குணத்தை விளக்கக் குணபெயர்கள் மற்றும் அடைமொழிகள் உள்ளன. ஆனால், அவை திருப்திகரமாக இல்லை எனக்கு. எனவே, நான் தமிழை பல பெயர்களைக் கொண்டு அழைக்க விரும்புகிறேன். தமிழின் அடைமொழிகளை தொகுத்து, என்னுடைய பாணியில் சில சேர்த்து கீழே குறிப்பிட்டுள்ளேன்.
- அருந்தமிழ்
- செந்தமிழ்
- பைந்தமிழ்
- தீந்தமிழ்
- தேன்தமிழ்
- வெல்லத்தமிழ்
- வல்லத்தமிழ்
- தென்தமிழ்
- செழுந்தமிழ்
- வண்டமிழ்
- பவளத்தமிழ்
- பண்டமிழ்
- நற்றமிழ்
- நெடுந்தமிழ்
- தாய்த்தமிழ்
- அன்னைத்தமிழ்
- கன்னித்தமிழ்
- சங்கத்தமிழ்
- பொற்றமிழ்
- மூத்தத்தமிழ்
- நுண்தமிழ்
- கற்றமிழ்
- பூந்தமிழ்
- முத்துத்தமிழ்
- வீரத்தமிழ்
- வெற்றித்தமிழ்
- மென்தமிழ்
- கலைத்தமிழ்
- தலைத்தமிழ்
- தனித்தமிழ்
- காவியத்தமிழ்
- நீதித்தமிழ்
- கவித்தமிழ்
- சொற்றமிழ்
- அமுதமிழ்
- குழவித்தமிழ்
- பேசும்தமிழ்
- சுத்தத்தமிழ்
- சொர்க்கத்தமிழ்
- இன்பத்தமிழ்
- பிறைத்தமிழ்
- ஏற்றமிழ்
- அழகுத்தமிழ்
- ஆளித்தமிழ்
- ஆழித்தமிழ்
- புத்தமிழ்
- முல்லைத்தமிழ்
- நலத்தமிழ்
- கோதமிழ்
- மெய்தமிழ்
விளக்கங்கள்
- அருந்தமிழ் – அருமையான தமிழ்.
- செந்தமிழ் – செம்மையான பண்புடைய உயரிய மொழி, தமிழ்.
- பைந்தமிழ் – பசுமையான தமிழ்.
- தீந்தமிழ் – கருத்துக்களை இனிமையுடனும் சுவையுடனும் பகிரும் தமிழ்.
- தேன்தமிழ் – தேன் போன்ற சுவையான தமிழ்.
- வெல்லத்தமிழ் – சிலருக்கு தமிழ் தேன். சிலருக்கு வெல்லம். ஆனால், என்றுமே அது அனைவருக்கும் தித்திக்கும்.
- வல்லத்தமிழ் – வல்லமையான தமிழ்.
- தென்தமிழ் – இந்தியாவின் தென் பகுதியில் பேசப்படும் தமிழ்.
- செழுந்தமிழ் – செழுமையான சொல் வளங்களைக் கொண்ட தமிழ்.
- வண்டமிழ் – வளமான மொழி.
- பவளத்தமிழ் – பவளம் போன்ற அரிய விலைமதிப்பற்ற மொழி.
- பண்டமிழ் – பண் இசைகளைக் கொண்ட மொழி.
- நற்றமிழ் – வேற்று மொழிச் சொற்கள் இல்லாமல், கற்பதற்கும் பேசுவதற்கும் எளிமையாக இனிமையாக இயங்கும் தமிழ்.
- நெடுந்தமிழ் – சிலப்பதிகாரம் போன்ற நீண்ட படைப்புகளைத் தரும் தமிழ்.
- தாய்த்தமிழ் – தமிழ் நமக்கெல்லாம் தாய் போன்றது.
- அன்னைத்தமிழ் – தாய் என்பவள் நம்மைப் பெற்றெடுத்தவள். ஆனால், தாய்ப்பாசம் காட்டும் அனைவரும் அன்னையே. தமிழ் நம்மை ஆயிரம் ஆயிரம் வருடங்களாகப் பாராட்டிச் சீராட்டி வளர்த்து வந்துள்ளது. எனவே அது நமக்கு அன்னை போன்றது.
- கன்னித்தமிழ் – எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தமிழ் தனது இயல்பை இழக்காது.
- சங்கத்தமிழ் – சங்கங்களினால் வளர்க்கப்பட்ட ஒரே மொழி தமிழ்.
- பொற்றமிழ் – தமிழ் நமக்குக் கிடைத்த பொன்.
- மூத்தத்தமிழ் – பிற மொழிகளைவிட மூத்தது தமிழ் மொழி.
- நுண்தமிழ் – நுட்பமான கருத்துக்களைக் கொடுக்கக்கூடிய தமிழ்.
- கற்றமிழ் – நாம் நம் வாழ்க்கைக்குக் கற்கவேண்டியது தமிழே.
- பூந்தமிழ் – பூக்களைப் போன்ற வாசம் கொண்ட தமிழ்.
- முத்துத்தமிழ் – முத்துக்களைப் போன்ற கருத்துக்களைக் கூறக்கூடிய தமிழ்.
- வீரத்தமிழ் – வீரத்தைப் பறைசாற்றிய தமிழ்.
- வெற்றித்தமிழ் – எத்தைனை மொழிகள் ஆதிக்கம் செலுத்தினாலும் அவற்றை வென்று தழைத்தோங்கும் தமிழ்.
- மென்தமிழ் – பிற மொழிகளைப் போன்று உச்சரிக்க கடினமான வார்த்தைகள் இல்லாத மென்மையான தமிழ்.
- கலைத்தமிழ் – எல்லா கலைகளையும் உள்ளடக்கியத் தமிழ்.
- தலைத்தமிழ் – எத்தனை மொழிகள் வந்தாலும் நமக்குத் தலையாய மொழி நம் தமிழ்தான்.
- தனித்தமிழ் – பிற மொழிகளைக் காட்டிலும் தனித்துவமான மொழி.
- காவியத்தமிழ் – காவியங்களைப் படைக்கின்ற தமிழ்.
- நீதித்தமிழ் – என்றும் நீதிநெறி பிறழாத் தமிழ்.
- கவித்தமிழ் – உலகில் எந்த மொழியிலும் தமிழ் மொழியைப் போன்று உவமை வைத்துக் கவிதை எழுத முடியாது. தமிழ் கவிதைகளே மிகவும் சுவாரசியமாக இருக்கும்.
- சொற்றமிழ் – மிகுந்த சொற்சுவைக் கொண்ட மொழி தமிழ்.
- அமுதமிழ் – அமுதம் போன்ற தமிழ்.
- குழவித்தமிழ் – குழந்தைகளுக்கு ஏற்றாற்போன்றும் வளைந்துகொடுக்கும் தன்மை கொண்டது. அவர்களுக்கும் புரியக்கூடிய அளவில் நாம் கவிதையோ கட்டுரையோ எழுதலாம்.
- பேசும்தமிழ் – தமிழ் நம்மிடம் நிறைய கருத்துக்களை பேசுகிறது. கருத்துக்களை அள்ளி அள்ளிக் கொடுக்கும் மொழி தமிழ்.
- சுத்தத்தமிழ் – தமிழ் ஒரு செம்மொழி. எந்த ஒரு மொழியையும் சாராது தனித்து இயங்கக்கூடியது.
- சொர்க்கத்தமிழ் – தமிழ் நாட்டில் வாழ்வதே ஒரு சொர்க்கத்தில் வாழ்வது போன்று உள்ளது.
- இன்பத்தமிழ் – தமிழைக் கற்பதும், பேசுவதும் இன்பமான ஒன்று.
- பிறைத்தமிழ் – வளர்பிறையாய் வளரும் தமிழ்.
- ஏற்றமிழ் – தமிழை எவராலும் அழிக்க முடியாது. அதற்கு என்றுமே ஏறுமுகம்தான்.
- அழகுத்தமிழ் – எல்லா நயங்களையும் உடைய அழகுத்தமிழ்.
- ஆளித்தமிழ் – சிங்கம் போன்ற கம்பீரமான தமிழ்.
- ஆழித்தமிழ் – கடல் போன்ற இலக்கண இலக்கியங்களைக் கொண்ட தமிழ்.
- புத்தமிழ் – என்றுமே புதுமையான தமிழ்.
- முல்லைத்தமிழ் – சொல்லழகில் முல்லைப் பூக்களைப் போன்று புன்னகைக்கும் தமிழ்.
- நலத்தமிழ் – நலமுடன் கோலோங்கி இருக்கும் தமிழ்.
- கோதமிழ் – மொழிகளுக்கெல்லாம் அரசன் போன்றது.
- மெய்தமிழ் – மெய்யானவைகளை உணர்த்தும் தமிழ்.
இன்னும் எத்தனை பெயர்கள் வைத்துத் தமிழை அழைத்தாலும் திருப்தியாக இருக்காது. அத்துனைச் சிறப்புடையதுதான் நம்தமிழ்.
நீங்க ஏதாவது தமிழை அடைமொழி வைத்துக் கூப்பிட ஆசைப்படுகிறீர்களா?
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
தமிழ் நயம் , தமிழ்வளம் .
பாரதி =பார் அதி ;
கூடப்பிறந்த தமிழ்.மனைவி,சகோதரி,அம்மா,
ஆறுதலை -முருகன் ,சிவன்,கண்ணன்.
(கிருபானந்தவாரி விளக்கம்)
பட்டியல் அருமை. தமிழின் பெருமை இன்று தமிலிங்கிஷ் பெருமை.௧௯௭௦க்குப்பின் பின்னடைவு.இன்று அரசுப்பள்ளியில் ஆங்கிலம் வழி.இது மனவலி.
உண்மைதான்.
வருகைக்கு நன்றி ஐயா.
எனது இடுகைகள்
ananthako.blogspot.com
இன்னும் எத்தனை பெயர்கள் வைத்து தமிழை அழைத்தாலும் திருப்தியாக இருக்காது. அத்துனைச் சிறப்புடையதுதான் நம்தமிழ்.
தமிழ் வாழ்க..!
அருமை அருமை..
மனம் களித்தேன்
எம் தாய்த்தமிழின்
பெருமையையும்
பெயர்களையும்
எண்ணிஎண்ணி மகிழ்கிறேன்..
நன்றிகள் நண்பரே…
நம் தமிழின் பெருமை அண்டம் அளவு பெரியது.
வருகைக்கு நன்றி.