ஒரு பொன் மாலைப் பொழுது. ஒரு மரத்தின் அடியில் அமர்ந்துகொண்டு ஏதோ இந்த உலகத்தை நான்தான் படைத்ததைப் போன்று இயற்கையை ரசித்துக்கொண்டிருந்தேன்.
அப்போது, “டேய்! இங்க பாருடா.” என்று ஒரு குரல் கேட்டது. சுற்றும் முற்றும் பார்த்தேன். யாரையும் காணோம். பிரம்மையாக இருக்கும் என்று என் வேலையைத் தொடர்ந்தேன்.
ஆனால், மீண்டும் அதே குரல் ஒலித்தது. ஆனால் அங்கு யாருமே இல்லை. எனக்குப் பயமாகிவிட்டது. கடவுளிடம் வேண்டிக்கொண்டு அமர்ந்திருந்தேன். ஆனால், அந்தக் குரல் தனது ஓசையை அதிகரித்தது.
“டேய்!…. டேய்!… இங்க பாருடா! நான் கேட்பதற்கு பதில் சொல்லுடா!”
துணிந்தவனாய் எதிர்க்குரல் விட்டேன்.
“யாருங்க நீங்க. யாரா இருந்தாலும் நேர்ல வந்து பேசுங்க. இப்படி மறஞ்சிருந்து பயமுறுத்தாதீங்க”. என்றேன்.
அதற்குப் பதிலாய் அந்தக் குரல் சொன்னது. “டேய்! நான்தான்டா உன் மனசாட்சி பேசுகிறேன்.”
“மனசாட்சியா! என் மனசாட்சியா பேசறது?”
“ஆமாம்.”
“சொல்லு மனசாட்சி. உனக்கு என்ன வேண்டும்?”
“நானும் உன்கூட இவ்வளவு நாளா இருக்கேன். உன் தரத்தை நான் சோதிக்க வேண்டும். உன்னோடு நான் இருக்க நீ தகுதியானவன்தானா என்று சோதனை செய்யனும்.”
“ஏன் திடீர்னு இப்படியொரு ஆசை?”
“ஏன்னா உலகத்தில் உள்ள முக்கால்வாசி பேருக்கு மனசாட்சியே இல்லையே! உனக்கு இருக்கான்னு நான் பார்க்க வேண்டாமா?”
“நீ சொல்றது உண்மைதான். பல பேர் தங்களுடைய மனசாட்சியை தொலைத்துவிடுகிறார்கள். சரி, என்ன சோதனை வைக்கப்போற?”
“நான் கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் பதில் சொல். நீ சொல்லும் பதில்களை வைத்துதான் நான் உன்னிடம் இருப்பதா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும்.”
“அப்படியா? டேய்! பைபிள், குரான், பகவத் கீதை இதுல இருந்துல்லாம் கேட்காதடா. அதெல்லாம் எனக்குத் தெரியாது.”
“அப்படியெல்லாம் கேட்கமாட்டேன். பத்தே பத்து கேள்விகள். மனசாட்சி உள்ளவர்களுக்குத் தெரிந்திருக்க வேண்டிய பதில்களை உன்னிடம் எதிர்பார்க்கிறேன்.”
“சரி. கேளு. முடிஞ்சவரை பதில் சொல்றேன்.” என்று நான் கூறியதும் என்னுடைய மனசாட்சி கேள்விகளைக் கேட்டது.
- “மக்கள் மாக்கள் ஆவது எப்படியடா?”
“மனசாட்சி என்பவன் இறப்பதாலடா.” - “மனிதன் நோய்வாய் படுவது எப்போதடா?”
“ஹரி (Hurry), வொரி (worry), கறி இவைகளுக்கு அன்பன் ஆவதாலடா.” - “உனக்குப் பிறர்க்கும் பகைமை வருவது எப்போதடா?”
“பிறரை நான் மன்னிக்க மறுக்கும்போதடா.” - “ஒருவன் ஏழையாவது எதனாலடா?”
“அவனின் சோம்பலும் ஊதாரித்தனமுமடா.” - “ஒருவன் வாழ்வில் உயர்வு எப்போதடா?”
“சிந்தனை சொல் செயலில் கலப்படம் இல்லாதபோதடா.” - “நீடு வாழ்பவன் எவனடா?”
“மக்களின் மனதில் நிறைபவனடா.” - “எத்தனை வருடங்கள் வாழ்ந்தால் மனிதனுக்குப் பெருமையடா?”
“மனிதன் எப்படி வாழ்ந்தான் என்பதுதான் பெருமையடா.” - “சாதிப்பவன் யாரடா?”
“தன் உழைப்பில் முன்னேறுபவனடா.” - “முழுமையான மனிதன் யாரடா?”
“அன்பை பறைசாற்றுபவனடா.” - “மகிழ்ச்சியானவன் யாரடா?”
“மனநிறைவுடன் வாழ்பவனடா (Happiness lies on contentment).”
பத்து கேள்விகளை முடித்தபிறகு,
“பலே! பலே! அருமையாகக் கூறினாய். உண்மையாக உனக்கு மனசாட்சி இருப்பதற்கு தகுதி இருக்கிறது. நான் உனக்குள் இருப்பதற்கும் அர்த்தம் இருக்கிறது. இனிமேல் நான் உன்னுள் சந்தோஷமாக இருப்பேன். நான் வைத்த சோதனையில் வென்றதற்கு வாழ்த்துக்கள். சரி, இப்போது உன் வேலையைத் தொடரு. நானும் என் வேலையைத் தொடர்கிறேன்.” என்று மனசாட்சி அமைதியானது.
நானும் என்னுடைய மனசாட்சியைத் தக்கவைத்துக் கொண்ட சந்தோசத்தில், அதற்கு நன்றி கூறி இயற்கையை ரசிப்பதைத் தொடர்ந்தேன்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
அட… மனச்சாட்சி பேச ஆரம்பித்து விட்டதா…? இனி பதிவுகள் சுவாரஸ்யமாக வரும்… தொடர்க… பாராட்டுக்கள்… கேள்விகள் பதில்கள் அட்டகாசம்… வாழ்த்துக்கள்…
irupathal enbatharku pathilaga irupal ena ullathu
வணக்கம்
கதை நன்றாக உள்ளது …அதற்கு கேள்வியும் அதற்கு விடையும் அருமை பதிவு அருமை வாழ்த்துக்கள்
தீபாவளிச் சிறப்புக்கவிதை கட்டாயம் கவிதை எழுதி அனுப்புங்கள்…
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நிச்சயமாக, கலந்துகொள்கிறேன். ஆறுதல் பரிசாவது வாங்கவேண்டும்.
வருகைக்கு நன்றி.