புரட்சி செய்வோம் 1

புரட்சி செய்வோம்

Cocopalm

சமீபத்தில் ஒருநாள் ஒரு திருமணத்திற்கும் மற்றும் ஒரு புதுமனை புகுவிழாவிற்கும் பக்கத்து ஊர்களுக்குச் செல்லவேண்டியிருந்தது. திருமணம் நடைபெற்ற ஊர் விரியூர். புதுமனை புகுவிழா மையனூரில். முதலில் விரியூருக்குச் சென்றுவிட்டு பின் அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மையனூருக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்தேன். என் இரு சக்கர வண்டியை எடுத்துப் புறப்பட்டேன்.

விரியூர் உள்ளே நுழைந்ததும் ஒருசிலர் கொய்யாக் கன்றுகளை எடுத்துக்கொண்டு எதிர் நோக்கி வந்துகொண்டிருந்தனர். ஏதோ ஒரு வண்டியில் பழக்கன்றுகள் கன்றுகள் விற்கிறார்கள், அதனால்தான் மக்கள் வாங்கி வருகிறார்கள்போலும் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறிது தூரம் கடந்தபிறகு பெண்கள் சிலர் கைகளில் மல்லிகை, ரோஜா போன்ற பூச்செடிகளை எடுத்துக்கொண்டு வந்தார்கள். “ஓஹோ! பூச்செடிகள் கூட விற்கிறார்களோ!” என்று ஆச்சர்யப்பட்டேன். மேலும் சிறிது தூரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்த ஆண்கள் தென்னங்கன்று, மாங்கன்று போன்றவைகளை வைத்திருந்தனர். அவர்களைப் பார்த்தால் எங்கள் ஊர் ஆட்களைப் போன்று இருந்தார்கள். “நம் ஊரிலிருந்து இங்கு வந்து கன்றுகள் வாங்கிச் செல்கிறார்களே! எங்கிருந்து வாங்கி வருகிறார்கள்?” என்று என் மனதிற்குள்ளேயே கேட்டுக்கொண்டேன்.

அந்த ஊரில் மேலும் முன்னேற முன்னேற எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. ஏகப்பட்ட பேர் தங்கள் கைகளில் பழக் கன்றுகளையோ அல்லது பூக் கன்றுகளையோ வைத்துக்கொண்டு என் எதிரில் வந்துகொண்டிருந்தார்கள். “என்ன, ஒரு ஊரே வித விதமான கன்றுகளை வாங்கிச் செல்கிறது? வண்டியில் பழக் கன்றுகள் விற்கப்பட்டால் யாரும் சட்டை செய்யமாட்டார்கள்; இன்று இத்தனைப் பேர் வாங்கிச் செல்கிறார்கள்! ஒருவேளை தரமான மரக் கன்றுகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றனவோ? அப்படியிருந்தால் நாமும் நமக்குத் தேவைப்படும் கன்றுகளை வாங்கிச்செல்லலாமே!” என்று எண்ணினேன். ஒருவரை நிறுத்தி அவரிடம் கேட்டேன்.

“ஏங்க, இந்தக் கண்ணுங்களெல்லாம் எங்க விக்கிது? வெல எப்படி?”

“எங்கையும் விக்கிலீங்க, கல்யாணத்துல தாம்பூலமா கொடுத்தாங்க.”

“தாம்பூலமா கொடுக்கிறாங்களா? எங்க?”

“தோ…. அந்த மண்டபத்திலதான்.”

அங்குதான் நானும் செல்லவேண்டியிருந்தது. சென்றேன், சைவ பிரியாணி சாப்பிட்டேன்; மணமக்களை வாழ்த்தினேன்; மொய் வைத்தேன். எனக்குத் தாம்பூலமாகக் கிடைத்தது தென்னங்கன்று.

தாம்பூலம் கொடுத்தவரிடம் கேட்டேன்.

“என்னங்க, வித்தியாசமா இருக்கே!”

“ஆமாம்ப்பா. வித்தியாசமாவும் இருக்கணும், பயனுள்ளதாவும் இருக்கணும். இந்தக் கல்யாணத்துக்கு வந்தவங்க என்னைக்கும் எங்கள நெனைக்கணும், அதான்.”

அப்போது எனக்குப் பின் இருந்து ஒரு பெண்மணியின் குரல் கேட்டது.

“என்னங்க, அந்தத் தம்பிக்குத் தென்னங்கன்ன குடுக்கிறீங்க, எங்களுக்கு ரோஜா கன்ன குடுத்திட்டீங்க?”

“ஒங்களுக்குன்னு கொடுத்தத வாங்கிட்டுப்போங்கம்மா. நாங்க ஒரு கணக்குப் பண்ணிதான் குடுத்துட்டிருக்கோம். அந்த ரோஜாக்கன்னும் ஒசத்தியான கன்னுதாம்மா.”

அந்தப் பெண்மணி நடையைக் கட்டினார்.

“தம்பி, பொம்பளைங்களுக்கு பூச்செடி, வயசுல பெரியவங்களுக்கு பழச்செடி, ஒன்னாட்டம் வாலிபப் பிள்ளைகளுக்கு மட்டும் தென்னங்கன்னு. ஏன்னா, நீங்க எல்லாம் வாழ்க்கையில உயரனும், ஒசந்து நிக்கணும் அதுக்குதான்.”

“இதுல, இம்புட்டு அர்த்தமா? நல்ல முயற்சி. பாராட்டப்பட வேண்டிய விஷயம்.”

என்று அவரிடம் கூறிவிட்டு அடுத்து நான் செல்ல வேண்டிய புதுமனை புகுவிழாவிற்கு கிளம்ப எத்தனித்தேன். கையில் தற்போது தென்னங்கன்று. அதை வைத்துக்கொண்டு எப்படி செல்வது என்று யோசித்தேன். என் மனதில் ஏதோ உதித்தவனாய் அதனோடே மையனூரில் நடைபெற்ற விழாவிற்கு சென்றேன். மொய் பணத்துடன் அந்தத் தென்னங்கன்றையும் அன்பளிப்பாகக் கொடுத்தேன். அவர்கள் முகத்தில் மட்டற்ற மகிழ்ச்சி. ஒருவித மன மகிழ்வுடன் வீட்டிற்கு வந்தேன்.

இப்போது அந்தக் கன்றைக் கண்டிப்பாக அவர்கள் நட்டிருப்பார்கள். பிற்காலத்தில் அது என்பேர் சொல்லும். என் மனமாற்றத்தில் உங்களுக்கும் மகிழ்ச்சிதானே?


Discover more from வளர்வானம்

Subscribe to get the latest posts sent to your email.

3 Comments

  1. Jeevalingam Kasirajalingam மே 28, 2014

Leave a Reply

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.

Discover more from வளர்வானம்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading