“குத்தவாடி சிம்மிலி!
ஆஹூம்! ஆஹூம்!
ஒரு கிலோ எள்ள உரலிலே போட்டு
அதுக்கேத்த வெல்லம் அரைகிலோ போட்டு
குத்தவாடி சிம்மிலி!
ஆஹூம்! ஆஹூம்!”
என்று பாடிக்கொண்டே உரலில் ஏதோ இடித்துக்கொண்டிருந்தார் என் பாட்டி. என்ன என்று கேட்டபோது
“சிம்மிலி செய்கிறேன்” என்று கூறினார்.
என்ன அருமையான இனிப்பு வகை தெரியுமா அது? சாப்பிட்டுப் பார்த்தேன். அமிழ்தம்
போன்று இருந்தது. அதனுடைய படத்தைக் கீழே இணைத்துள்ளேன்.
பார்க்கும்போதே எச்சி ஊறுதா? செஞ்சு சாப்பிடுங்க. அதன் செய்முறைய பற்றிதான் பார்க்கப்போறோம்.
சிம்மிலி என்பது தமிழர்களின் பாரம்பரிய பலகார வகைகளில் ஒன்று. இதனைச் செய்ய எள்
உபயோகப்படுவதால் இதனை ‘எள்ளிடி’ என்றும் கூறுவர்.
தேவையான பொருள்கள்:
- கேழ்வரகு மாவு
- எள்
- வேர்க்கடலை பயிறு
- வெல்லம்
- உப்பு
செய்முறை:
விகிதம்: ஒரு கிலோ கேழ்வரகு மாவுக்கு அரை கிலோ எள், அரை கிலோ வேர்க்கடலை பயிறு மற்றும் அரை கிலோ வெல்லம் தேவை.
உப்பு: வெல்லத்தில் ஏற்கனவே உப்பிருப்பதை நினைவில் வைத்துக்கொண்டு கேழ்வரகு மாவுக்குத் தேவையான அளவு போடவும். இது இனிப்புப் பண்டமாதலால் அதன் இனிப்புச் சுவையைத் தூக்கிக் கொடுக்க இளம் உப்புதான் இருக்க வேண்டும்.
கேழ்வரகு மாவையும் உப்பையும் சேர்த்து அடைகளாகச் சுட்டு எடுத்துக்கொள்ளவும். (சப்பாத்தி மாவைப் போன்று பிசைந்துகொண்டு அதைச் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும். பின் அவற்றைத் தகடையாகத் தட்டி சுட வேண்டும்.)
பின் அடைகளை சிறு சிறு துண்டுகளாகப் பிய்த்துக்கொண்டு அனைத்தையும் உரலில் போட்டு உலக்கையால் நன்றாக மாவு போன்று வரும் வரை குத்தி எடுத்துக்கொள்ளவும்.
எள் மற்றும் வேர்க்கடலை பயிறு ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ளவும். அவற்றை
உரலில் போட்டுத் தூள் தூளாகும் வரை குத்தவும்.
அதேபோல், வெல்லத்தையும் தனியாக உரலில் போட்டு நன்றாகத் தூளாக்கவும்.
இப்போது அனைத்தையும் ஒன்றாக உரலில் போட்டு நன்றாகக் கலக்கும் வரை உலக்கையால் குத்தவும். சிம்மிலி தயார்.
செய்முறை மிகவும் நீண்டதாக இருந்தாலும் அதனுடைய சுவையை என்னும்போது சிறியதே.
குறிப்பு: சிம்மிலி ஒருவாரம் வரை கெடாமல் இருக்கும். ஆனால், கைப்படாமல் தனியாகத் தேவையான அளவு கரண்டியால் எடுத்து வைத்துக்கொண்டு சாப்பிடவும்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.