நா நெகிழ் வாக்கியங்கள் பகுதி ஒன்று, இரண்டு.
நா நெகிழ் வாங்கியங்கள் படிப்பதற்கு கடினமாக இருப்பதுடன் பொருள் பொதிந்தும், மனப்பாடம் செய்வதற்கு கஷ்டமாகவும் மற்றும் கொஞ்சம் வேடிக்கையாகவும் இருக்க வேண்டும். அந்த வகையில் பின்வரும் நா நெகிழ் வாங்கியங்களை எழுதியுள்ளேன். நாப்பிறழாமல் படிக்கவும், மனப்பாடம் செய்து ஒப்பித்துப் பார்க்கவும் முயற்சி செய்து பாருங்கள்.
- கல்லு முள்ளு தாண்டி மெல்ல வெல்ல ஏகும் நல்ல செல்லப் பிள்ளையே, நில்லு சொல்லு செல்லு.
- ஏணி மேல கோணி, கோணி மேல குண்டு, குண்டு மேல புல்லு, புல்லுக்குள்ள பூச்சி, எது எனக் கேட்ட ஆச்சி விட்டது ஆயுள் மூச்சி.
- காலம் நல்ல காலம். நல்ல நல்ல நாளும் மெல்ல மெல்ல நாளும் நம்மை வந்து சேரும் என எண்ணி எண்ணி நாளும் போடு நல்ல தாளம்.
- மருமகள் மாமியார்கிட்ட நான்தான்டி உனக்கு மாமியார்ன்னு சொன்னாளாம். மருமகள் மாமியார் ஆகியும் மாமியார் மருமகள் ஆகியும், மாமியார் மருமகள் சண்டை ஓயலையாம்.
- லகர ளகரமும், ழகர லகரமும், றகர ழகரமும் பழக்கத்தில் புழக்கத்தில் இருந்தாலும் குழந்தைகள் பேசும்போது வழ கொழ பேச்சாத்தான் இருக்கும்.
- வாழ வழியத்து பீதி அடைந்த வைத்தி சம்பாதிக்க நேர்த்தியான வழி பார்த்து, பார்த்தியிடம் தன் கதிக்கு வழி கேட்க, பார்த்தி செய்த சதியால் வைத்தி கைதியானான்.
- வழக்கமாக ழான்னு சொன்னா குழறுவதால குழந்தை குழந்தைன்னு சொல்லக்கூட குழறுது. குழந்தைய குழவின்னு குழையாம குழந்தைன்னுதானே கொஞ்சிக் குழையறோம்? குழந்தைன்னு சொல்லவே குழறுகிற குழவி குழவின்னு சொன்னாலும் குழறும்.
- வளவன் மிக நல்லவன் மற்றும் வல்லவன் எனச்சொன்னவன் வளவனே மிக மிகச் சின்னவன் எனச் சொல்வதில் வல்லவன்.
- சட்டையைக் கழற்றி சுழற்றி சுழற்றி வீசி வந்த மொட்டையன் கால்தடுக்கி விழுந்து கைலாசம் போனதைப் பார்த்த சொட்டையன் பதறியடித்து வந்து கதறி கதறி அழுதான்.
- அப்ப அப்ப வந்து வந்து சந்துல சிந்து பாடிய சிந்துவ நந்து வந்து பொந்துல இருக்குற பாம்பு எழுந்து வந்துரும் நீ வந்து கம்முனு குந்துன்னானாம்.
இந்த நா நெகிழ் பயிற்சி உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்திருக்கும் என நம்புகிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி. வணக்கம்.
Discover more from வளர்வானம்
Subscribe to get the latest posts sent to your email.
வணக்கம் ! ரீகன் !
நலம்! உன்னுடைய படைப்புகளை வரவேற்கிறேன் !
வணக்கம் விமல்! முதன்முறையாக பின்னூட்டமிட்டதற்கும் உன்னுடைய வாழ்த்துக்கும் நன்றி விமல்.
யம்மாடி…! ஐந்தும் ஏழும் சிறிது சிரமம் தான்….!